சட்ட விரோத கைது மற்றும் காவலர்களின் மிருகச்செயல் குறித்த சிறு கட்டுரை

முன்னுரை:

காவலர்களின் மிருகச்செயல் அல்லது காவலர்களின் வன்முறை என்பது ஒரு சிவில் உரிமை மீறல் என்று சட்டபூர்வமாக வரையறுக்கப்படுகிறது, அது ஒரு செயலிருக்கு எதிராக தேவையற்ற அல்லது அதிகப்படியான சக்தியை பயன்படுத்துவதாகும். காவலர்களின் மிருகத்தனம் என்பது ஏதேனும் ஒரு நடைமுறையை செயல்படுத்தும்போது அதிகப்படியான உடல்ரீதியான தாக்குதல் அல்லது வாய்மொழி தாக்குதலை சந்தேக நபர்கள் மீது பயன்படுத்துவதாகும். காவலர்களின் மிருகச்செயலின் சந்தேகத்திற்குரிய நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிப்பதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏராளமான செய்திகளை மக்களின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. உதாரணத்திற்கு சாத்தான்குளம் காவலரின் மிருகச்செயல், ஜார்ஜ் ஃபிலாய்ட் மரணம் இவை ஊடகங்களின் மூலமாக மட்டுமே பெருமித மக்களுக்கு தெரிய வந்தது. ஆனால் இதே போன்று பல்லாயிரக் கணக்கான வழக்குகள் வந்த வண்ணம் உள்ளன.

காவல்துறையிடம் கைது செய்யப்பட்டவர்களில் இறப்பு எண்ணிக்கை அதிர்ச்சியூட்டுகிறது. ஏப்ரல் 2017 மற்றும் பெப்ரவரி 2018 க்கு இடையில் இந்தியாவில் 1674 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது ஒரு நாளைக்கு ஐந்து நபர் இறக்கும் வீதம் ஆகும் என்று உள்துறை அமைச்சகம் மாநிலங்களவை முன்வைத்த புள்ளிவிவரங்கள். இதுபோன்ற சம்பவங்களால் ஏதேனும் நபர் பாதிக்கப்பட்டால் மனித உரிமை பாதுகாப்பு சட்டம், 1993 இன் கீழ் அமைக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையம் குழுக்களுக்கு முன்பு நிவாரணம் வேண்டலாம். ஆனால் டிசம்பர் 2019-ன் நிலவரப்படி 3 மாநிலங்களில், மாநில மனித உரிமை ஆணையங்கள் இல்லை, இரண்டு மாநிலங்களில் கமிஷன்கள் முற்றிலும் செயல்படவில்லை, 10 மாநிலங்களில் ஆணையத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளது. இதுவே நம் நாட்டின் அவலநிலை ஆகும்.

காவலர்களின் வன்முறை தொடர்பான விவரங்கள்:

தேசிய குற்றப்பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) தகவலின்படி 2001 மற்றும் 2018 க்கு இடையில் இந்தியாவில் 1727 இறப்புகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் 26 காவல்துறையினருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது. உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசாவைத் தவிர நாடு முழுவதும் இதுபோன்ற மரணங்களுக்கு எந்த ஒரு காவல் துறையினரும் தண்டிக்கப்படவில்லை. காவலில்வைக்கப்பட்டடோரின் மரணங்கள் தவிர 2001க்கும் 2018 க்கும் இடையில் 2000த்திற்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் வழக்குகள் காவல் துறையினருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், அந்த வழக்குகளில் 344 காவல்துறையினர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான சர்வதேச கடமைகள் :

ஐ. நா. சாசனத்தின் ஒரு முக்கிய நோக்கம் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை ஊக்குவிப்பது; இது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை, இதேபோல் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

யூ.டி.எச்.ஆரின் பிரிவு 3-ன் படி அனைவருக்கும் வாழ்க்கை, சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கான உரிமை உண்டு.

யூ.டி.எச்.ஆரின் பிரிவு 5-ன் படி எவரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படவோ அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற தண்டனைக்கு உட்படுத்தபப்படவோ கூடாது.

இதேபோல், ஐ.சி.சி.பி.ஆரின் பிரிவு 6(1) வழங்குவது யாதெனில், ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளார்ந்த உரிமை உண்டு. இந்த உரிமை சட்டத்தால் பாதுகாக்கப்படும். எவரும் தன்னிச்சை முடிவுகளால் மற்றவர்களின் வாழ்க்கையை பறிக்கக்கூடாது. ஐ.சி.சி.பி.ஆரின் பிரிவு 7 வழங்குவது யாதெனில் எவரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்படவோ அல்லது கொடூரமான மனிதாபிமானமற்ற தண்டனைக்கு உட்படுத்தபப்படவோ கூடாது. குறிப்பாக, மருத்துவ அல்லது விஞ்ஞான பரிசோதனைகளுக்கு அவரது அனுமதியின்றி எவரும் உட்படுத்தப்பட கூடாது.

கைது செய்யப்பட்ட நபரின் அரசியலமைப்பு உரிமைகள்:

கைது செய்யப்பட்ட மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு அரசியலமைப்பு சில உரிமைகளை உறுதிப்படுத்தியுள்ளது.

  • சித்திரவதைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-இன் கீழ் வரையறுக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை.
  • குற்றவியல் நடைமுறைக் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 41, 2009 ஆம் ஆண்டில் 41 ஏ, 41 பி, 41 சி மற்றும் 41 டி ஆகியவற்றின் கீழ் பாதுகாப்புகளை உள்ளடக்கியதாக திருத்தப்பட்டது, இதனால் விசாரணைக்கான கைதுகள் நியாயமான காரணங்களுடன் மற்றும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். கைதுசெய்யப்படுவது குடும்பம், நண்பர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வெளிப்படையாய் இருக்கவேண்டும்.
  • கைது செய்யப்படுவதற்கான காரணங்களை அறிய உரிமை உண்டு: இந்திய அரசியலமைப்பு பிரிவு 22 படி கைது செய்யப்பட்ட நபருக்கு கைது செய்யப்படுவதற்கான காரணத்தை விரைவில் கூற வேண்டும். இவ்வாறு பிரிவு 22(1), கைது செய்யப்பட்ட நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்கிறது.
  • வழக்கறிஞரை அணுகுவதற்கான உரிமை: ஒரு வழக்கறிஞரை அணுகுவது கைது செய்யப்பட்டவரின் அடிப்படை உரிமையாகும், இது பிரிவு 22-ல் கூறப்பட்டுள்ளது. மேலும், டி.கே.பாசு (எதிர்) மேற்கு வங்காள மாநிலம் என்ற வழக்கிலும் உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
  • மேஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்துவதற்கான உரிமை: பிரிவு 22(2)-இன் படி குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் மேஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்த வேண்டும், தவறினால் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 340-ன் கீழ் தவறாக காவலில் வைத்ததற்காக காவலர்கள் பொருப்பாவார்கள்.

முடிவுரை:

காவல்துறை என்பது சமூகத்தின் மிக முக்கியமான அமைப்புகளில் ஒன்றாகும்.  ஆகவே, காவல்துறையினர் அரசாங்கத்தின் மிகவும் புலப்படும் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள்.  தேவை, ஆபத்து, நெருக்கடி மற்றும் சிரமம் உள்ள நேரத்தில், ஒரு குடிமகனுக்கு என்ன செய்வது, யாரை அணுகுவது என்று தெரியாதபோது, ​​காவல் நிலையமும் ஒரு காவல்துறையினரும் அவருக்கு மிகவும் பொருத்தமான மற்றும் அணுகக்கூடிய நபராக இருக்கிறார்கள். காவல்துறையினரின் கைகளில் மாறுபட்ட அதிகாரங்களை வழங்குவது அவர்களின் பணியினை சீராக செய்வதற்காக மட்டுமே. ஆனால், அத்தகைய அதிகாரங்களை தவறாக பயன்படுத்துவதால் குடிமக்களின் மனித உரிமை பாதிப்படைகிறது. எனவே சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை வழங்குவதும் அவர்களின் குறைகளை சந்திப்பதும் காவலர்களின் தொழில்முறை ஆகும். மேலும், இதுபோன்ற காவல்துறையினரின்  மிருகச்செயல்களை தடுக்கும் விதமாக விசாரணை அறைகள் உட்பட காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற பார்வையாளர்கள் (NOV-கள்) திடீர் ஆய்வுகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும், இது கைது செய்யப்பட்டநபர் சித்திரவதைக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளாக செயல்படும், இது 2015 ஆம் ஆண்டில் டி.கே. பாசு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


ABOUT THE AUTHOR

M. Preetha

M Preetha

M. Preetha is a final year student at Saveetha School of Law, and loves writing blogs both in English as well as Tamil. She prioritizes writing articles in Tamil so that it can reach even the layman. She is the proud author of the first Tamil publication at The Law Blog.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

%d bloggers like this: